ஆளும் கடசி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் சபையில் ஏற்பட்ட குழப்ப நிலைமையை அடுத்து வரவு-செலவுத் திட்டம் மீதான விவாதம் நாளை வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
சபாநாயகர் சமல் ராஜபக்ஸ இத்தீர்மானத்தை அறிவித்தார். பதில் நிதி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம வரவு-செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைத்தார்.
இவர் வரவு -செலவுத் திட்டத்தை வாசித்து முடித்தவுடனேயே எதிர்க்கட்சியினர் குழப்பம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.பதாதைகளை ஏந்தியிருந்தனர். பொதுமக்களுக்கு இந்த வரவு-செலவுத் திட்டத்தால் எவ்விதமான நன்மையும் இல்லை என்று கூக்குரலிட்டனர்.
சர்வதேச நாணய நிதியத்தால் தயாரிக்கப்பட்ட வரவு -செலவுத் திட்டமே இது என்று பெரிதாகச் சத்தமிட்டனர். பதிலுக்கு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூக்குரல் இட்டனர். இதையடுத்து அங்கு களேபரம் ஏற்பட்டது.
இந்நிலையில் சபாநாயகர் வரவு-செலவுத் திட்டம் மீதான விவாதத்தை ஒத்திவைத்து சபை அமர்வை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
வரவு செலவுத் திட்டத்தில் காணப்பட்ட அம்சங்கள்
முகாம்களில் எஞ்சியிருக்கும் 25,000 அகதிகளின் மீள்குடியேற்றத்தை இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்தல்,அவர்களுக்கு தேவையான வாழ்வாதாரங்கள், கட்டுமாணங்கள் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுத்தல்.
வட மாகாணத்தில் 40,000 ஹெக்ரயர் நிலங்களில் விவசாயச் செய்கையை ஏற்படுத்துதல்.
வடக்கில் கட்டுமாணப் பணிகளை முன்னெடுத்தல்,ஏ9 வீதி, ஏ32 வீதி ஆகியவற்றை திருத்தி அமைத்தலும் இதற்குள் அடங்கும். தேவையான பணம் 2 மில்லியன் ரூபாய்.
2016 ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறைப் பயணிகளின் எண்ணிக்கையை 2.5 மில்லியன் ஆக்குதலும் 2.8 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டுதலும்.
ழூசுற்றுலாத் துறை அபிவிருத்திக்கான முதலீடாக அரசு, தனியார்,வெளிநாட்டவர்களிடம் இருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலர் எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலாத் துறை வலயங்களாக ஏழு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை அபிவிருத்தி செய்தல்.
வரி ஆணைக்குழுவின் சிபாரிசுகளுக்கு அமைய வரி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அரசு அங்கிகாரம் வழங்குதல் சம்பந்தமான பூர்வாங்க நடவடிக்கைகளைச் செய்தல்.
2011ஆம் ஆண்டு அரச ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு வழங்குதல்.
அரச ஓய்வூதியத்தை அதிகரித்தல்.
சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்துதல்
மொத்தத் தேசிய வருமானத்தை அதிகரித்தல்
துண்டு விழும் தொகையைக் குறைத்தல்
