சிறுமி அலிஷா

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆறு வயது சிறுமியை, அமெரிக்க அரசு பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்திஉள்ளது.

இந்த சிறுமி, விமானத்தில் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் வசிப்பவர் டாக்டர் சந்தோஷ் தாமஸ். இவரது ஆறு வயது மகள் அலிஷா. தாமஸ், சமீபத்தில் தனது மகளுடன் விமானத்தில் செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்ய சென்றார். 

அங்கிருந்த டிராவல் ஏஜன்ட் அலிஷாவுக்கு விமான டிக்கெட் வழங்க மறுத்து விட்டார்.சிறுமி அலிஷாவின் பெயரை பயங்கரவாதிகள் கண்காணிப்பு பட்டியலில் அமெரிக்க அரசு சேர்த்துள்ளதாகவும், அலிஷா விமானத்தில் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதைக் கேட்ட தாமஸ், ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைந்தார். இதையடுத்து, இந்த பயங்கரவாத பட்டியலை தயாரித்த அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையை அணுகி, விளக்கம் கேட்டார்.

இதற்கு பதில் அளித்த பாதுகாப்பு துறை அதிகாரிகள், சிறுமியின் பெயர் பயங்கரவாதிகள் கண்காணிப்பு பட்டியலில் இடம் பெற்றது உண்மை தான் என, ஒப்புக் கொண்டதோடு, இந்த பட்டியலில் இருந்து அலிஷாவின் பெயரை நீக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

இதுகுறித்து தாமஸ் கூறுகையில்,”ஆறு வயது சிறுமி யாரை அச்சுறுத்த முடியும். வேண்டுமானால், தனது சகோதரியை அச்சுறுத்தலாம். அமெரிக்க அரசை அச்சுறுத்த முடியுமா’என்றார்.

இந்நிலையில், அலிஷா விமானத்தில் செல்வதற்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இருந்தாலும், ஒவ்வொரு முறை விமானத்தில் செல்லும் போதும், கடுமையான பரிசோதனைகளுக்கு பின்னரே அவருக்கு அனுமதி அளிக்கப்படும்.

சிறுமியின் பெயர், பயங்கரவாதிகள் கண்காணிப்பு பட்டியலில் என்ன காரணத்துக்காக சேர்க்கப் பட்டது என்பது தொடர்பான விவரங்களை அமெரிக்க அரசு தெரிவிக்கவில்லை.